தனியார் மருத்துவமனைக்கு செந்தில்பாலாஜி மாற்றப்பட்ட விவகாரம் - அமலாக்கத்துறை மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் கைதாகியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.  
தமிழகத்தில் மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, கடந்த 13ம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரை விடுவிக்க உத்தரவிடக் கோரி செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.  

இந்த மனுவை கடந்த 15-ந் தேதி விசாரித்த உயர்நீதிமன்றம்,  செந்தில் பாலாஜியை பரிசோதித்து இரு மருத்துவக் குழுவினர் அளித்த அறிக்கையை சந்தேகிக்க முடியாது எனக் கூறி, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி அளித்து உத்தரவிட்டது. மேலும், செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனுவுக்கு பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், விசாரணையை வரும் 22-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.  

இதைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு  எதிராக அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிபதிகள் சூர்யகாந்த், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய கோடைகால விடுமுறை அமர்வு முன்பு அமலாக்கத்துறை சார்பில் முறையிடப்பட்டது.  அதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற கோடைகால விடுமுறை அமர்வு, நாளை (ஜூன்.21) இந்த மனுவை விசாரிக்கவுள்ளது.  


 

Show comments

தொடர்பான செய்திகள்

மதுபோதையில் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற இரண்டு பேர் - பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து காவல்துறையில் ஒப்படைப்பு.

பேக்கரி கடையின் பூட்டை உடைத்து கொள்ளை - போலீசார் விசாரணை! .

காட்பாடி அருகே பட்டா கத்தியில் கேக் வெட்டி கொண்டாட்டம்: அச்சத்தில் பொதுமக்கள்..!.

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம்.. தந்தை, மகன் கைது!.