செந்தில்பாலாஜி கைதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை..! - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கம்

உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடுகளவு கூட இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.

சென்னை கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தமிழக மாணவர் பிரபஞ்சன் முதலிடம் பிடித்துள்ளதற்குப் பாராட்டுத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்ற வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் செந்தில்பாலாஜி என்று கூறினார். இந்த வழக்கில் 2019ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 2021ம் ஆண்டு பாதிக்கப்பட்டவர்களும், செந்தில்பாலாஜியும் சமாதானமாக போய்விடுவதாக தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, வழக்கை தள்ளுபடி செய்தது.

உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து தர்மராஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், செந்தில்பாலாஜியிடம் பணம் கொடுத்து பாதிக்கப்பட்ட 13 பேர் உள்ளிட்டோர் தாக்கல் செய்த சாமாதான மனுவை ஏற்க மறுத்து, இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்துமாறு 8.9.2022ல் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

ஊழல் தடுப்புச் சட்டத்தை செந்தில்பாலாஜி வழக்குடன் இணைக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், 60 நாட்களில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க தமிழக காவல்துறைக்கு அவகாசம் அளித்ததாகவும் கூறினார்.

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியே அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பது கடுகளவும் இல்லை என்றும் அண்ணாமலை கூறினார்.

மேலும், யாரையும் பழிவாங்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என்றும், பணத்தை திரும்ப அளித்துவிட்டால் தவறு சரியாகிவிடாது என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.

Show comments

தொடர்பான செய்திகள்

ஆளுநர் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை - அமைச்சர் பொன்முடி!.

மணிப்பூர் விவகாரத்தில் மோசமான வீடியோ வெளிவந்துள்ளதால் பிரதமர் வாய் திறந்து உள்ளார்..! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி!.

அமைச்சர் வீட்டில் ஏன் ரெய்டு: வெளியான தகவல்..!.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாகத்துறையினர் சோதனை .